×

ஜோதிடத்தில் ஹோரை சாஸ்திரம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஹோரை என்பது ஆதிக்கம் எனப் பொருள்படும். ஒரு நாளில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் பெயர்களே அந்த நாளின் பெயராக உள்ளது. ஒளி கிரகங்களுக்கும் ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களுக்கும் மட்டுமே ஹோரையில் இடமளிக்கப்படுகிறது. சாயா கிரகங்களான ராகு – கேது போன்றவைகள் ஹோரையில் இடம்பெறவில்லை. ஆகவே ஹோரையின் காலங்களில் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் கதிர் பூமியில் அதிகமாக விழும். இந்த ஹோரையானது தினமும் ஒரு மணி நேரம் ஒவ்வொரு கிரகமும் தனதாக்கிக் கொள்ளும். அதிக ஹோரை எந்த கிரகத்திற்கு உள்ளதோ அதுவே அன்றைய கிழமையாக உலகம் முழுவதும் கிரகங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

ஹோரையை எப்படி சூட்சுமமாக பயன்படுத்தலாம்

சில நாட்களில் நாம் சில காரியங்களை செய்ய முடியாவிடில் இந்த ஹோரையை பயன்படுத்தி அந்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். நமக்கு கெடுதல் செய்யும் திசா, புத்தி காலங்களிலும் ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனி காலக்கட்டங்களிலும் நமக்கு வெற்றி பெறுவதற்காக அல்லது நமக்கு சாதகமாக சில காரியங்களை செய்வதற்கும் இந்த ஹோரை காலங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே ரகசியம். ஹோரை என்பது ஒரு குறிப்பிட்ட கிரகங்களுக்கு உரிய காலமாக இருப்பதால் அந்த கிரகங்களுக்கு உரிய செயல்களை அந்த கிரகங்கள் தடையின்றி விரைவாகவும் சிறப்பாகவும் செய்வதற்கு ஏதுவாக அமைகின்றது.

ஹோரையில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை

சூரிய ஹோரை

செய்யக்கூடியவை: மேலதிகாரிகளின் அனுமதி பெறுவதற்கும், அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திப்பதற்கும், உயில் எழுதுவதற்கும் சிறந்தது. மருத்துவரை சந்திப்பதற்கும் – குறிப்பாக எலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த ஹோரை சிறப்பானது.

செய்யக்கூடாதவை: சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும் பால் காய்ச்சுதல் மற்றும் குடி புகுதல் கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்து செய்யக்கூடாது.

சந்திர ஹோரை

செய்யக்கூடியவை: சந்திர ஹோரை என்பது சுப ஹோரைதான். இதில் வளர்பிறை காலம் என்பது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகின்றது. கல்யாணம், பெண் பார்த்தல், புதியதாக வங்கியியல் கணக்கை தொடங்குவது, குழந்தைகளுக்கு சேமிப்பை செய்வதற்கு உண்டியல் வாங்கி கொடுப்பது, வேலைக்கு விண்ணப்பம் செய்வது, யாத்திரை செல்வது, புண்ணிய நதிகளில் நீராடுவது, தாயிற்கு பரிசளிப்பது, வளைகாப்பு செய்வது மற்றும் பெண்கள் தொடர்பான விசேஷங்களுக்கு நல்ல ஹோரை ஆகும்.

செய்யக்கூடாதவை: தேய்பிறை ஹோரையில் சில முக்கியமான சுப நிகழ்வுகளை தவிர்த்தல் நலம். பணம் கொடுக்கல், வாங்கல் கூடாது.

செவ்வாய் ஹோரை

செய்யக்கூடியவை: ரத்த தானம் செய்யலாம், நிலம் வாங்குவது விற்பது பற்றி பேச்சு வார்த்தை மற்றும் ஒப்பந்தம் போடலாம். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளை எடுக்கலாம், மருத்து எடுத்துக் கொள்ளலாம். தெய்வீக தொடர்பான விஷயங்களை செய்யலாம். வங்கியில் கடன் வாங்கியிருந்தால் மாதத் தவணையை செவ்வாய்க்கிழமை இந்த ஹோரையில் செய்தால் விரைவாக கட்டி முடிக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

செய்யக்கூடாதவை: கொடுத்த பணத்தை இந்த ஹோரையில் கேட்கக்கூடாது. வீண் வாக்குவாதங்கள் இந்த ஹோரையில் ஏற்பட்டால் மௌனமாக இருந்தால் பிரச்னைகளை ஏற்படுத்தாது. விசேஷங்கள் இந்த ஹோரையில் செய்ய வேண்டாம்.

புதன் ஹோரை

செய்யக்கூடியவை: கல்வி தொடர்பான விஷயங்களை செய்யலாம். இந்த ஹோரையில் குழந்தைகளின் படிப்பிற்காக ஹயக்ரீவரை அர்ச்சனை செய்தால் சிறப்பான பலன் தரும். ஜோதிடரை சந்திக்கச் செல்லலாம். முகூர்த்தம் குறித்துக் கொள்ளலாம். ஏதேனும் நல்ல ஒப்பந்தத்திற்காக கையெழுத்து போடுவது நல்லது. யோகா, தியானம் போன்றவற்றை முதன் முதலில் தொடங்குவதற்கும் ஏற்ற ஹோரை.

செய்யக்கூடாதவை: சொத்துகளை பார்வையிடல் கூடாது. நேர்மையற்ற காரியங்களை செய்யக்கூடாது.

குரு ஹோரை

செய்யக்கூடியவை: சுபகாரியங்கள் அனைத்திற்கும் சிறந்த ஹோரை. வீடு, மனை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற ஹோரை. ஆடை, ஆபரணங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பெண் பார்த்தல், சுபகாரியங்கள் பற்றி பேசுவது, குழந்தைகளுக்காக ஏதேனும் விஷயங்களை செய்வது, வித்தையை கற்றுக்கொடுக்கும் குருமார்களிடம் ஆசி வாங்கிக் கொள்வது, யானைக்கு கரும்பு கொடுப்பது மற்றும் கோயிலில் தட்சிணாமூர்த்தி அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பு. பிரயாணங்கள், தீர்த்த யாத்திரை மற்றும் ஸ்தல யாத்திரை செய்தல் நலம்.

செய்யக்கூடாதவை: நேர்மையற்ற காரியங்களை செய்யக்கூடாது. புதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை இந்த ஹோரையில் அழைத்து முதன் முதலாக விருந்து வைத்தல் கூடாது.

சுக்ர ஹோரை

செய்யக்கூடியவை: பெண்கள் தொடர்பான விசேஷங்களுக்கும் சிறந்த ஹோரை. சுபகாரியங்கள் அனைத்திற்கும் சிறப்பு. வீட்டிற்கு தேவையான பொருட்களையும் ஆடம்பர பொருட்கள் யாவையும் வாங்கலாம். வாகனங்கள் வாங்கலாம். பண கொடுக்கல், வாங்கல், விவசாயம், குதிரை, பசு, நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளை வீட்டிற்கு அழைத்து வருதல். பெண் பார்த்தல், காதலை சொல்லுதல், முதன் முதலாக நோயிற்கு மருந்து உட்கொள்ளுதல் மற்றும் முகூர்த்தம் குறித்தல் போன்றவை சிறப்பாக இருக்கும்.

செய்யக்கூடாதவை: நகை இரவல் கொடுத்தல், இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்தல் மற்றும் முதன் முதலாக வீட்டிற்கு வருபவருக்கு அசைவ விருந்து கொடுத்தல் கூடாது.

சனி ஹோரை

செய்யக்கூடியவை: கிரக தோஷங்களுக்கான பரிகாரங்கள், பாத யாத்திரை, தீர்த்த யாத்திரை, கடனை திருப்பிச் செலுத்துதல், மரக்கன்று நடுதல், பெரியோர்களுக்கோ முன்னோர்களுக்கோ திதி கொடுத்தல் மற்றும் தானம் கொடுத்தல் சிறப்பான பலன்களை தரும்.

செய்யக்கூடாதவை: நேர்மையற்ற செயல்கள்யாவும் இந்த ஹோரையில் செய்தால் தோஷங்களாக மாறி சனி பகவானின் தண்டனைக்கு உள்ளாவார்கள். உதாரணத்திற்கு லஞ்சம் கொடுத்தலும் பெறுதலும். வீட்டிலிருந்து பிரேதத்தை இறுதி சடங்கிற்காக எடுத்துச் செல்லுதல், பயணம் தொடங்குதல், முதன் முதலாக மருந்து எடுத்தல், பிறந்த குழந்தையை முதன் முதலாக பார்க்கக் கூடாது.

The post ஜோதிடத்தில் ஹோரை சாஸ்திரம் appeared first on Dinakaran.

Tags : Aroloy ,Sivakanesan ,Hori ,
× RELATED சாயா நாடி 2